கட்டுரைகள்.

கையேந்தி பவன்கள்
16-04-2008

சென்னை வந்த புதிதில் கையேந்தி பவன்களில் வெகு ஆர்வமாக சாப்பிட்டேன். தேடித்தேடி ஒவ்வொரு இடமாக போய் சாப்பிடுவது வழக்கம். சுத்தம் சுகாதாரமாக இருந்தன.

இப்போது நிலைமை தலைகீழாகி விட்டது. கையேந்தி பவன்களில் சாப்பிடுவதில்லை.

மக்கள் தொகை அதிகரித்து விட்டது. விலைவாசியும் கட்டுக்கடங்காமல் எகிறி விட்டது. தினமும் 3 வேளை வசந்த பவன், உடுப்பி உணவகங்களில் சாப்பிட்டால் பழுத்து விடும். இதனால் பெரும்பாலான தனியர்கள் கையேந்தி பவன்களே தஞ்சம் என்று இருக்கின்றனர்.

கடைக்காரர்களும் சுத்தத்தை எல்லாம் பார்ப்பதே இல்லை. இவர்கள் தட்டுகளை கழுவும் தண்ணீரில் தட்டுகளை போட்டால் மூழ்கவே மூழ்காது. அழுக்கு நீர் அந்த அளவு கெட்டியாக இருக்கும். அரைகுறையாக கழுவிய தட்டுகளில் பிளாஸ்டிக் காகிதத்தில் உணவை வைத்து நம் கைகளில் தரும்போது தட்டின் அடியில் பிசுபிசுவென அருவெருக்கத்தக்க வகையில் எண்ணைப்பசை ஒட்டும்.

குடிக்க அவர்கள் தரும் தண்ணீரைப் பார்க்கவே கிலியாக இருக்கும். விலையை அதிகம் இவர்கள் ஏற்றாமல், சுவை, தரம், சுகாதாரம் ஆகியவற்றை பெருமளவில் குறைத்து விட்டனர். விற்கப்படும் பொருள்களின் அளவு, எடையும் பாதியாகி விட்டது. 'குடிமகன்கள்' இவர்களின் கடைகளை நாடிச் சென்று சாப்பிட்டு விட்டு ரகளை செய்வது அதிகரித்து விட்டது. அவர்களை எதிர்கொள்ளும் ஒரு கடுகடு முகபாவத்துடனேயே எல்லோரையும் எதிர்கொள்வதும் இவர்களின் வாடிக்கையாகி விட்டது. மரியாதையே கிடையாது பெரும்பாலும்.

வியாபாரம் முடிந்தவுடன் கழிவுகளை அப்படியே அங்கங்கே போட்டு விட்டு செல்லும் இவர்களால் பெரும் சுற்றுப்புற சூழல் கேடு உண்டாகிறது. கொஞ்சம் கூட எதைப்பற்றியும் சிந்திக்காமல் பிளாஸ்டிக் ஷீட் கழிவுகளை பாதாள சாக்கடையில் கொட்டி விட்டு செல்வார்கள்.

மக்களுக்கும் சூடு சொரணை குறைந்து விட்டது. இதையெல்லாம் கண்டும் காணாதது போல வயிறு நிறைந்தால் போதும் என்று சாப்பிட்டு விட்டு போகின்றனர்.

சில மாதங்கள் முன் கையேந்தி பவன்களால் சுற்றுச்சூழல் கெடுகிறது, சுகாதாரம் சீரழிகிறது, வியாதிகள் பரவுகின்றன என்றெல்லாம் சொல்லி மாநகராட்சி நடவடிக்கை எடுக்கப் போவதாக பரபரப்பான செய்திகள் வந்தன. இது வரை ஒன்றும் பிடுங்கவில்லை, வழக்கம் போல. 

=========