கட்டுரைகள்.

மடசாம்பிராணி

சற்று புத்திக்குறைவாக நடந்து கொள்பவர்களை நாம் பலவாறாகத் திட்டுவது வழக்கம். முட்டாள், மூளை கெட்டவன், கூமுட்டை, அறிவிலி, வீணாப்போனவன் என்பன சில அடைமொழிகள். மடசாம்பிராணி என்பதும் அப்படிப்பட்ட வசவே.

எனக்கு இந்த மடசாம்பிராணி எனும் வார்த்தை காதில் விழும் போதெல்லாம் (என்னை யாரும் இவ்வளவு உயர்வாக விளித்ததில்லை) இவ்வார்த்தை குறித்த சந்தேகம் எழும். மட+சாம்பிராணி = மடசாம்பிராணி. மட என்றால் மடத்தனம், சாம்பிராணி என்றால் அது தூபப்புகை போடும் சாம்பிராணியா அல்லது ஓணான் வகையைச் சேர்ந்த சாம்பிராணி எனும் ஊர்வன ஜந்துவா என ஐயம் எழும். என்ன யோசித்துப் பார்த்தும் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. எனக்குப் பழக்கமான அனைத்து அறிவு ஜீவிகளிடமும் கேட்டுப்பார்த்ததில் ஒருவழியாக ஒன்று மட்டும் தெரிந்தது. இவர்கள் எவரும் அறிவு ஜீவிகள் அல்ல இவர்கள் தான் மடசாம்பிராணிகள் என்று. ஆமாம், யாருக்கும் இது குறித்து தெரியவில்லை.

சில நாட்கள் முன்பு நண்பர் ஒருவர் அரியதொரு தகவலை அளித்து என் ஐயத்தைப் போக்கி எனது அறிவுக்கண்களை அகலத் திறந்து வைத்தார்.

அதாகப்பட்டது, "(ஆன்மீக‌) மடங்களில் கூடம் போன்ற இடத்தில் ஒரு பெரிய கட்டிச் சாம்பிராணி இருக்கும். இதை வழக்கம் போல தழலில் இட்டு தூபத்திற்கு உபயோகப்படுத்துவதில்லை. அது இருந்த இடத்திலேயே இருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் காற்றில் கரைந்து, நாளடைவில் உருமாறி ஒழுங்கற்ற ஒரு தோற்றத்தை அடையும். இது தான் மடசாம்பிராணி எனப்படுகிறது".

இதுதான் மடசாம்பிராணியின் பெயர்க்காரணம் என விளக்கினார். காரணப்பெயர் வைப்பதில் தமிழனுக்கு நிகர் தமிழன் தான்.

=========