கட்டுரைகள்

ரிலையன்ஸ்

ரிலையன்ஸ் பிரெஷ் சென்னையைப் பொறுத்தவரை வலுவாகக் காலூன்ற ஆரம்பித்துவிட்டது என்பது கண் கூடாகத் தெரிகிறது. நமது அரசியல் (எதிர்க்) கட்சிகளின் ரிலையன்ஸ் எதிர்ப்புக் குரல் வழக்கம் போல சுருதி இறங்கி தீனமாக ஒலித்துக் கொண்டுள்ளது; அல்லது குரலே நின்று விட்டது. எத்தனை பெட்டி கை மாறினவோ, யாருக்குத் தெரியும். 

இது போன்ற பெரும் முதலைகள் சில்லறை வணிகத்தில் இறங்கினால், விலைவாசியை தாறுமாறாக ஏற்றிவிடுவார்கள். பின் இவர்கள் வைத்தது தான் சட்டம், விலை என்றெல்லாம் நமது வியாபாரிகளின் சங்கங்களும், அரசியல்வாதிகளும் கூறுகின்றனர். சிறு, குறு வணிகர்கள் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு போக வேண்டியது தான் என்கின்றனர். இது எந்த அளவுக்கு பலிக்கப் போகிறது எனபதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். என்னதான் ரிலையன்ஸ் விலையை ஏற்றினாலும் காங்கிரசை விட அதிகமாக விலைவாசியை ஏற்றவே முடியாது என உறுதியாகக் கூறலாம். அந்த அளவுக்கு ஒரு மட்டமான பொருளாதார நிர்வாகம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது என்பது நிதர்சனம். 

இதெல்லாம் ஒரு புறமிருந்தாலும், ரிலையன்ஸ் போன்றவர்களின் வரவால் ஓர் ஆராக்கியமான போட்டி நிலவும் போலத் தெரிகிறது. 

ரொம்ப நாளாகவே, எந்தக் கடைக்குச் சென்றாலும் அங்குள்ள ஊழியர்கள் மற்றும் கல்லாவில் வீற்றிருக்கும் முதலாளிகளின் போக்கும் சிறு வாடிக்கையாளர்களை அவர்கள் கையாளும் பாங்கும் பெரும்பாலும் ஏமாற்றத்தையும் எரிச்சலையும் தரக்கூடியதாகவே இருக்கிறது. ஆள் பார்த்து விலை சொல்வதில் இவர்களுக்கு நிகர் இவர்களே. இவர்கள் கிறுக்கித் தரும் பில்கள் நமது மருத்துவர்களின் மருந்துச் சீட்டுகளுக்கு சவால் விடும் வகையில் இருக்கும், ஒரு இழவும் புரியாது அல்லது புரியக் கூடாது என்பதற்காகவே அப்படி எழுதப்படும். 

ஒரு வசதியான நபர் இது போன்ற கடைக்குச் சென்று உயர்தர தின்பண்டங்களை வாங்கும் போது அவர் பெறும் மரியாதைக்கும், சற்று வசதிக் குறைவான ஒருவர் தன் குழந்தையை அதே கடைக்கு அழைத்துச் சென்று மூன்று ரூபாய்க்கு டைகர் பிஸ்கெட் வாங்கிக் கொடுக்கும் போது இவர் பெறும் மரியாதைக்கும், மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வித்தியாசம் இருக்கும். இந்த வசதிக் குறைவான நபர் "பிஸ்கெட் பாக்கெட் அடிபட்டு பிஸ்கெட்டெல்லாம் நொறுங்கி இருக்கே" என தப்பித் தவறிக் கேட்டால், "குட் டே பிஸ்கெட் (ரூ.10க்கு மேல்) இருக்கு தரவா?" என வெறுப்பேற்றுவது போன்ற சம்பவங்கள் ஏராளம். எவ்வளவு மட்டமான பொருளாக இருந்தாலும், அதில் நல்ல பொருளை விட ஒரு ரூபாய் இலாபம் அதிகம் கிடைத்தால் அதை அண்டப்புளுகு புளுகியாவது நமது தலையில் கட்டி விடுவார்கள். இது போன்ற சிறு வணிகர்களின் கடைக்குச் சென்று சாமான் வாங்கும் நடுத்தர தட்டு மக்களின் நிலையும் பரிதாபம் தான்.

பிளாட்பார வியாபாரிகளைப் பற்றி சொல்லவே தேவையில்லை. அதிகம் டிமாண்டில் இருக்கும் (வெள்ளிக் கிழமை ‍- பூ) ஒரு பொருளை சந்தர்ப்பத்திற்கேற்ப யானை விலை, டினோசார் விலை என்று விற்று நமது வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டு வாழ்வர். தப்பித் தவறி இவர்களிடம் நாம் ஏதாவது வாங்கப் போய், ஏதேனும் ஒரு காரணத்தால் எதுவும் வாங்காது திரும்பும் போது கேட்க வேண்டுமே; நமது காது கூசும்படியான வசவுகள் வேண்டுமென்றே நமது காதுகளில் விழுவதற்காகவே ஒலிபரப்பப்படும். போதாக்குறைக்கு தங்கள் வியாபார எச்சங்களையும், கழிவுகளையும் ஆங்காங்கு கொட்டி ஊரையே நாறடிப்பர். 

ஒரு விதத்தில் இவர்களின் நிலைமை பொருளாதார ரீதியில் வருந்தத்தக்கதாக இருப்பினும், வாடிக்கையாளர்கள் இவர்களிடம் படும் அல்லல்களுக்கு ஓரளவு கடிவாளம் போடுவது போலாவது ரிலையன்ஸ் போன்ற முதலைகள் களத்தில் காலூன்ற வேண்டும். அப்போது தான் இவர்களின் கொட்டம் அடங்கும்.  

ஆனால் ரிலையன்ஸை அனுமதித்தது போல கேரிஃபோர், வால்மார்ட் போன்ற அன்னிய சக்திகளை சில்லறை வர்த்தகத்தில் அனுமதிப்பது, கண்டிப்பாக 1947 இல் விரட்டப்பட்டவர்களை விரட்டியவர்களே (காங்கிரஸ்) வெற்றிலை, பாக்கு, மேளத்துடன் வரவேற்பதற்கு ஒப்பாகும் என்றால் அது மிகையல்ல.

 ====++++====