சென்னை செந்தமிழ் அகராதி  
சென்னை செந்தமிழ் அகராதி 6

புறம்போக்கு
பொதுமகள் (விபச்சாரி), பொது உபயோகத்திற்கானது, கடைப்போக்கு நிலம்.

நிலத்தைப் பொறுத்தவரை ‘மக்கள் வசம்விடப்படாததும் தீர்வை விதிக்கப்படாததுமாகிய நிலம்’ என்பது அரசாங்கத்தின் பார்வை.

இது ஒரு பெண் மீது பிரயோகிக்கப்படும்போது, பொதுமகள் (விபச்சாரி) என்ற பொருளைத் தருகிறது

பட்டா (உருது)
பத்திரம், (வாள்), பட்டை

ஒப்புகைச் சீட்டு, குத்தகைச் சீட்டு என்று வரும். வாய்ச்சண்டையில் ஒருவன் மற்றொருவனை ‘புறம்போக்கு’ என்று திட்டுகையில் திட்டப்பட்டவன் ‘நீ மட்டும் பட்டாவா?’ என்று எதிர்க்கேள்வி கேட்பது சென்னை வழக்கம்.

அபீட் (ஆங்கிலம் - Offbeat / Abate)
தப்பித்தல், தப்பி ஓடுதல்

'அபீட் ஆகிட்டான், நான் அபீட்டுப்பா' போன்றவற்றைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். 'தப்பிச்சேன்' என்பது போன்ற பொருள் தரும் இச்சொல். இதன் மூலம் ஆங்கிலம்.   Offbeat /  Abate என்பதே.   Offbeat என்ற ஆங்கிலச் சொல்லுக்கு Way-Out, Escape, தப்பிச் செல்லல் என்பது பொருள். 'எஸ்கேப் ஆவது, தப்பிப்பது' என்ற பொருளிலேயே 'அபீட்' பயன்படுத்தப்படுகிறது. (சில நேரங்களில் 'இறந்து விட்டான்' என்பதைக் கூட ‘அபீட் ஆயிட்டான்’ என்று சொல்வதுமுண்டு.  (Abate - Die-Away)

அலக், அலேக் (மூல‌ம் : உருது அல‌க்)
தனியாக (தனித் தனியே பிரித்தல்)

இந்தி, உருதுவில் 'அலக்' (Alag) என்ற‌ சொல்லை 'த‌னியாக‌' என்ற‌ பொருளில் பய‌ன்ப‌டுத்த‌க் காண‌லாம். 'அலேக்கா தூக்கு' என்பதற்கு 'தனியாக தூக்குதல்' என்று பொருள்.

த‌மிழில் உள்ள‌ அல‌கு (Unit) என்ற‌ சொல்லுக்கு 'தனியொரு பகுதி' என்று பொருள். இதை இச்சொல்லுடன் தொட‌ர்புப‌டுத்தினால் அருமையான சொற்கிளவி கிடைக்கும்.

அலகு + அல‌கு + ஆன‌ = அல‌க‌ல‌கான‌ - தனித்தனியான