சென்னை செந்தமிழ் அகராதி  
சென்னை செந்தமிழ் அகராதி 2

குஜிலி
பெண், குஜராத்தி, குஜிலிக்கடை - அந்திக்கடை

குஜிலி என்னும் சொல் பொதுவாக அதிகப்படியாக அலட்டும் (மேனாமினுக்கி) பெண்களை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. குறத்தியைக் கூட குஜிலி என்று சென்னையில் குறிப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன். குஜிலிக்கடை என்பது மாலையில் மட்டும் நடத்தப்படும் அந்திக்கடை வகையறா என்று உள்ளது. ஒருவேளை பெண்க‌ள் அல்ல‌து குஜ‌ராத்திய‌ர் ந‌ட‌த்தும் க‌டையை குஜிலிக்க‌டை குறிப்பிட‌லாம்.

டப்பா
இந்துஸ்தானி இசையில் அமைந்த ஒரு தமிழ்ப்பாட்டு என்று குறிக்கப்பட்டுள்ளது.

நான் கூட 'டப்பா டான்ஸ் ஆடிரும்' என்றால் சும்மா 'எகனை மொகனை' ஆக சொல்லப்பட்டது என்று நினைத்தேன். டப்பா என்பதற்கு பொருளே ஒரு வகையான 'எசப்பாட்டு' என்று தெரிகிறது.  அதனால் 'டப்பா டான்ஸ் ஆடிருச்சு' என்று சொன்னால் தப்பே இல்லை.

டகால்டி
திருட்டுத்தனம்

இந்த‌ சொல் தமிழகராதியில் இல்லை. Dacoity என்ற ஆங்கிலச் சொல் மருவி டகால்டி என்று வழங்கப்படுவதாக (அம்பட்டன் வாராவதி போல) கேள்விப்பட்டிருக்கிறேன். Dacoity என்றால் அதாவது கூட்டமாக கொள்ளை அடித்தல் என்று தெரிகிறது.  பல்கலை அகராதியில் இதற்கு தீவட்டிக்கொள்ளைக்காரன் என்று பொருள் உள்ளது. எனவே ‘டகால்டி வேலை' என்றால் ‘திருட்டுத்தனம்’என்று கொள்ளலாம்.