சென்னை செந்தமிழ் அகராதி  
சென்னை செந்தமிழ் அகராதி 3

வூட்ல சொல்லிக்கினு வந்தியா....

"ஊட்ல (அல்லது) வூட்ல சொல்லிக்கினு வந்தியா" எனும் சொற்றொடர் சென்னை வாழ் மக்களின் காதுகளில் அன்றாடம் தேனொழுக விழும் ஓர் (இ)வசை மொழி. சற்று கவனக்குறைவாக சாலையைக் கடக்கும் போது அல்லது சாலையில் செல்லும் போது பொதுவாக எதிராளி சொல்லும் ஓர் சொற்றொடர் இது.

 இந்த வசவுக்கு "வீட்டில் திரும்ப வரமாட்டேன் என்று சொல்லிக் கொண்டு வந்தாயா?" என்பது பொருள் எனத் தெரிந்திருந்தாலும், வசவின் பூர்வீக சரித்திரம் தெரியாமல் இருந்தது. ரொம்ப நாளுக்குப் பிறகு தான் இதன் பின்னணி தெரிந்தது. எப்படி இது எனக்கு தெரியவந்தது என்று ஞாபகம் இல்லை. அனேகமாக எங்கோ, எப்போதோ படித்தது. கி.ராசநாராயணன் போன்று யாராவது எழுதி இருக்கலாம்.

 தேனி பக்கம் வருச நாட்டு மலையில் கஞ்சா பயிரிடுவது ரொம்ப நாள் பழக்கமாக இருந்து வந்திருக்கிறது. சட்ட விரோதம் என்றாலும் அருமையான மகசூல் எடுத்து வந்திருக்கின்றனர். (இப்போதெல்ல்லாம் ரொம்ப போலீஸ் கெடுபிடி, எல்லாம் ரியல் எஸ்டேட் ஆக்கிரமிப்பு என ஏகப்பட்ட தொந்தரவு வேறு. அதனால் எல்லாம் வெகுவாகக் குறைந்து விட்டன என நினைக்கிறேன்).

முன்பெல்லாம் தேனி பக்கம் இருந்து பஞ்சம் பிழைக்க, தேன் எடுக்க வருச நாட்டு மலைக்கு போகும் போது தமது வீட்டில் இன்னின்ன சாமான், சாவி, நகை போன்றவற்றை இன்னின்ன இடத்தில் வைத்திருக்கிறேன் என பூடகமாக சொல்லி விட்டுப் போவார்களாம். வருச நாட்டு கஞ்சா காட்டுக்குள் போய், ஆசாமிகளிடம் சிக்கி விட்டால் அவ்வளவு தான்... வீட்டுக்குத் திரும்ப முடியாது. விஷயத்தை காவல்துறை வரை கொண்டு போய் விடுவான் என்று, போட்டுத் தள்ளி விடுவார்கள். இவ்வாறு சொல்லி விட்டுப் போகும் வழக்கம் தான், "வூட்ல சொல்லிக்கினு வந்தியா" என வழங்கப்பட்டு வருகிறது.