சென்னை செந்தமிழ் அகராதி  
சென்னை செந்தமிழ் அகராதி 1

சென்னையில் வழங்கப்படும் நானாவிதமான 'தனித்தமிழ்' சொற்களை எண்ணி பல நாட்கள், இவற்றின் பொருள் என்னவாக இருக்கும் என்று வியந்திருக்கிறேன். எச்சொல்லுக்கும் உறுதியாக ஒரு பின்புலம் அல்லது காரணம் இருக்கும்; அல்லது ஒரு வரலாறே அதன்பின் ஒளிந்திருக்கும்.

சென்னைத் தமிழ் என்றாலே பொருளற்ற சொற்களை உள்ளடக்கிய ஒரு தனித்தமிழ் என்று பலரும் எண்ணி வருகின்றனர். ஆனால் சென்னைத்தமிழின் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு சரியான பொருள் அல்லது பின்புலம் உள்ளது என்பதே உண்மை. இதற்கு சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்அகராதி ஒரு சான்றாக விளங்குகிறது. "ஆதலினால், சென்னைத் தமிழில் செப்புவீர், செம்மொழியைக் காப்பீர்"

இணையத்தில் இச்சொற்களை தேடலில் இட்டபோது பெரும்பாலானவர்கள் தங்களின் சொந்தக் கருத்துக்களையே இச்சொற்களின் மீதேற்றி பலவிதமாக பொருளிட்டிருக்கின்றனர். பெரும்பாலானோரின் க‌ருத்துக்க‌ள் ச‌ரியாக இல்லை. மனம்போன போக்கில் அவரவர் எண்ணப்படி 'புருடா' விட்டிருக்கின்றனர். ஆராய்ச்சி நோக்கில் சென்னையில் வழங்கப்படும் 'தனித்தமிழ்' சொற்கள் குறித்து மேலும் தேடிய‌போது சுவையான‌ விடைகள் பெறப்பட்டன.

சென்னைப்பல்கலைக்கழகத்தின் தமிழகராதியே பெரும்பாலும் மூலமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
 

http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/
 

இச்சொற்க‌ள் ப‌ல‌வும் வேறுமொழியிலிருந்து எடுத்தாளப்பட்ட 'ம‌ருவல்'களே என்ப‌து தெளிவு. எந்த‌ ஆண்டிலிருந்து இச்சொற்க‌ள் அக‌ராதியில் சேர்க்க‌ப்ப‌ட்ட‌ன‌ போன்ற‌ விவ‌ர‌ங்க‌ள் அக‌ராதியில் இல்லை.

டங்குவார் (தமிழ்)
குதிரையைப்பிணிக்கும் தோற்பட்டை

ட‌ங்குவார் அந்து போச்சு

'டங்குவாரறுதல்' என்ற‌ சொல் அப்படியே அக‌ராதியில் இருக்கிற‌து. 'வேலை மிகுதியாற் களைத்துப் போதல்' என்ற‌ பொருள் 'டங்குவாரறுதல்'க்கு உள்ள‌து. அதிக‌ வேலை செய்து நொந்து போன‌வ‌னை இங்க‌ன‌ம் நையாண்டி செய்த‌ல் சென்னைய‌ர் வ‌ழ‌க்க‌ம்.  குதிரையின் தோற்ப‌ட்டை அறுத‌ல் என்று‌ம் இத‌ற்குப் பொருள் த‌ர‌ப்ப‌ட்டுள்ள‌து.

சோமாறி
பொருள் : சோம்பேறி (தமிழ்)

'ஏனாதிப‌ர்வகை' என்றும் சோமாறி எனும் சொல் குறிக்க‌ப்ப‌டுகிற‌து. இங்கு 'ஏனாதி' என்றால் வட ஆர்க்காடு, நெல்லூர் ஜில்லாக்களில் வசிக்கும் ஒரு பழைய சாதியினரைக் குறிக்கிறது எனத் தெரிகிறது.

ஏனாதி என்றால் நாவிதன், புறம்போக்கு, ப‌டைத்த‌லைவ‌ன், ம‌ற‌வ‌ன், என்று ப‌ல‌ வித‌ங்க‌ளில் பொருள் கிடைக்கிற‌து.

பன்னாடை
பொருள் : மூடன் (தமிழ்)

கீசிடுவேன்
பொருள் : கிழிச்சிடுவேன் என்பதே இங்கனம் மருவியது.

தாராந்துடுவே
தாரா என்ப‌து விண்மீன், வாத்து, ஒருவ‌கை நாரை என்ப‌ன‌வ‌ற்றையெல்லாம் குறிக்கிற‌து என‌த் தெரிகிற‌து. இதற்கும் 'தாராந்துடுவே'க்கும் சம்பந்தம் இல்லையென்றும் தெரிகிறது.

தாரன் என்பது உடையவனைக் குறிக்குஞ் சொல்; வார்சுதாரன். என‌வே, தாராந்துடுவே என்று திட்டப்படுதல் வாரிச‌ற்றுப் போகும் ஒரு நிலையை நினைவுப‌டுத்தும் என்று ச‌ப்பைக்க‌ட்டு க‌ட்ட‌லாம்.

 இந்தியில் 'டர்' என்றால் பயம். 'டர் ஆயிட்டான்பா' என்று பயந்து போனவனைச் சொல்வது வழக்கம்.  'தாராந்துடுவே' இதிலிருந்து வந்திருக்கலாம்.

வீட்டாண்டை
அண்டை என்பது பக்கத்தில், சமீபத்தில் என்று பொருள் தரும் ஒரு சொல். எனவே கடையாண்டை, வீட்டாண்டை என்று குறிப்பிடப்படுவதை கொச்சை என்று சொல்ல இயலாது. ஆனால் வூட்டாண்ட‌, கோயிலாண்ட‌, க‌டியாண்ட‌ என்று சொல்வ‌தெல்லாம் கொஞ்ச‌ம் அதிக‌ம்தான்.

டபாய்த்தல் (மூலம் : இந்தி)
பொருள் : ஏமாற்றுதல் மற்றும் பரிகசித்தல் (நக்கல்) என்று பொருள் சுட்டப்பட்டுள்ளது.

பேமானி (மூலம் : உருது)
பொருள் : நாணமற்றவன்.

மொள்ளமாறி (முல்லைமாறி)
முடிச்சவிக்கி (முடிச்சவிழ்க்கி)
முடிச்சுமாறி

இம்மூன்று (தமிழ்) சொற்களுமே ஒரே பொருள் தருவன என்று அகராதியில் காட்டப்பட்டுள்ளது. மூட்டை போன்றவற்றின் முடிச்சை அவிழ்த்துத் திருடும் திருடனைக் குறிக்கும் சொற்களாகும்.

கேப்மாரி, கேப்பமாறி
பொருள் : திருடன்

'கேப்பை' என்பதற்கு 'ஜில்லாக்களில் திருட்டுத்தொழிலாற் பிழைக்கும் தெலுங்கச்சாதியார்' என்று பொருள் கிடைக்கிறது. எனவே இச்சொற்கள் திருடுபவனைக் குறிக்கின்றன.

பிகில்
பொருள் : சீட்டியடித்தல்

பீச்சாங்கை
இது 'இடது கை' என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

கசுமாலம்
பொருள் : ஆபாசம், ஒழுக்கக்கேடு
கசுமாலர் :அசுத்தர்
கசுமாலி : அசுத்தமுள்ளவள், சண்டைக்காரி

கசுமாலம் என்பது கஸ்மாலம் என்றும் பிரயோகிக்கப்படுவதால் இதுவும் உருது மொழி மூலம் உடையது என்று பலர் எண்ணலாம். ஆனால் இது ஒரு தமிழ்ச்சொல் (அல்லது வட‌ மருவல்) என்று தெரிகிறது (உபயம் : திருப்புகழ், சொல் : கசுமாலர்)

சாவுகிராக்கி (மூலம் : உருது)

கிராக்கி (உருது) என்பதற்கு அதிகவிலை என்று பொருள். சாவுகிராக்கி என்பது பிணத்தின் முன் நின்று பேரம்பேசும் இழிமையைக் குறிக்கிறது.

பேஜார்
பொருள் : சோர்வு, தொந்தரவு

மாஞ்சா (உருது)
மாஞ்சம் (தமிழ்) : மாமிச‌ம்
பொருள் : காற்றாடிக்கயிற்றில் தடவுதற்குக் கண்ணாடிப் பொடியோடு கலந்த பிசின்வகை.

'நெஞ்சிலேகீற மாஞ்சாசோத்தை தோண்டி எடுத்துருவேன்'

(நெஞ்சைப் பிள‌ந்து இத‌ய‌த்தை தோண்டி எடுக்கும் கொடூர‌த்தை எவ்வ‌ள‌வு அழ‌காக‌ச் சொல்கின்ற‌ன‌ர் சென்னைத் த‌மிழில்)

பாடு, படவா, படுவா (மூலம் : உருது, சொல் : பர்வா, இந்தி : படவா)

பாடு (Baadu) எனும் சொல்லானது சென்னை மக்களுக்கு மிகவும் பழகிப்போன ஒரு சொல். வியப்புக்குரிய விடயம் என்னவென்றால் இதன் பொருள் இதன் பெருவாரியான உபயோகிப்பாளர்களுக்குத் தெரியாது.

படவா என்பது நாம் அடிக்கடி உபயோகிக்கும் ஒரு வசை மொழி. குறிப்பாக குழந்தைகளை செல்லமாகக் கடிந்து கொள்ளும்போது 'படவா' அல்லது 'படுவா ராஸ்கல்' என்று பூச்சி காட்டுவது 'தமிழர் வழக்கம்'. இதில் அதிர்ச்சிக்குரியது என்ன என்றால் அச்சொல் காட்டும் கேவலமான பொருளாகும்.

பொருள் : ஆண் எனில் 'கூட்டிக்கொடுப்ப‌வன்' எனக்குறிக்கும் இச்சொல் பெண் எனில் விப‌ச்சாரி என்று பொருளிடும்.  இச்சொல்லே மருவி 'பாடு' என்று செந்தமிழில் வழங்கப்படுகிறது

புருடா
பொருள் : ப‌ய‌முறுத்துத‌ல்