சில நாட்கள் முன்பு ஹர்பஜன் சிங்கிடம் அறை வாங்கி அழுத ஸ்ரீசாந்த் மீண்டும் அழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நேற்று போட்டி துவங்கும் முன் கிரிக்கெட் வீரர்கள் கேன்டீனில் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது பக்கத்தில் இருந்த ஒரு சக வீரர் ஸ்ரீசாந்தின் தட்டில் இருந்த வடையை நைசாக திருடி விட்டதாகத் தெரிகிறது. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே சாப்பிட்டதில் ஸ்ரீசாந்துக்கு இடதுபுறம் இருந்தவர் திருடினாரா அல்லது வலதுபுறம் இருந்தவர் திருடினாரா என்று ஸ்ரீசாந்துக்கு தெரியவில்லை.
தனது வடை திருடப்பட்டதை அறிந்த ஸ்ரீசாந்த் கேன்டீனிலேயே அழ ஆரம்பித்து விட்டார். சக வீரர்கள் அவரைத் தேற்ற வேறு ஒரு வடையை கொடுத்தனர். ஆனால் திருடப்பட்ட அதே வடை வேண்டும் என்று ஸ்ரீசாந்த் தேம்பித்தேம்பி அழுதார்.
கேன்டீனிலிருந்து மைதானம் வரை அழுது கொண்டே வந்த ஸ்ரீசாந்த் தொலைக்காட்சியில் தனது முகம் தெரியும் வரை அழுதார். முதலில் பந்து வீசிய அவர் பந்தில் எச்சிலுக்கு பதில் கண்ணீரையே தோய்த்து வீசினார்.
ஸ்ரீசாந்துக்கு குவியும் சலுகைகள், ஆதரவு
ஸ்ரீசாந்த் இனி போட்டிகளில் கலந்து கொள்ளச் செல்லும்போதெல்லாம் அவரை ஆறுதல்படுத்த அவரது அம்மாவும் உடன் செல்ல விமான டிக்கெட் தரப்படும் என்று ஐபிஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரபல பொம்மை தயாரிப்பு நிறுவனம் ஒன்று ஸ்ரீசாந்துக்கு பத்து ஆண்டுகளுக்கு தேவையான டெடி பியர் பொம்மைகளை இலவசமாய் வழங்குவதாக அறிவித்துள்ளது.
அகில உலக மலையாளிகள் சமாஜம் ஸ்ரீசாந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. உலகெங்கும் அனைத்து டீக்கடைகளையும் மூடி போராட்டம் நடத்தவிருப்பதாக மலையாள சமாஜத் தலைவர் தெரிவித்தார்.
இந்திய குழந்தைத் தொழிலாளர் தடுப்பு அமைப்பு ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.