நையாண்டி விலாஸ்

ஆர்வக் கோளாறு

எல்லோருக்கும் குறிப்பிட்ட ஒவ்வொன்றின் மீது ஆர்வம் இருக்கும். அந்த ஆர்வமானது ஆசை, மோகம், வெறி எனப் பலவாறு ஆர்வத்தின் அளவுக்கேற்றவாறு நாமகரணம் செய்யப்படுகிறது. பெரும்பாலோருக்கு பணத்தின் மீது அளவற்ற ஆசை, மோகம், வெறி, ஆர்வம் இன்னபிற எல்லாம் உண்டு. இது பொதுவானது, இதை விட்டு விடலாம் சிலருக்கு புத்தகம், திரைப்படம், சீரியல், இசை போன்றவற்றை அனுபவிப்பதில் அலாதி இன்பம். இவையல்ல நான் சொல்வது.

 நான் சொல்வது, குறிப்பிட்டவற்றை கற்றுக் கொள்ள இருக்கும் ஆர்வம், ஆசை, மோகம், வெறி. இந்த ஆர்வம் அல்லது இன்னபிற முற்றினால் பைத்தியம் தான். சட்டையைக் கிழித்துக் கொண்டு அலைவதில்லை ‍‍அது ஒன்று தான் குறை. அப்படி நேர்ந்தால் கூட ஆச்சர்யப்படுவதிற்கில்லை. உதாரணத்திற்கு என் நண்பர் ஒருவர் இருக்கிறார். எந்த விஷயத்திலாவது ஆர்வம் வந்து விட்டால், அதனைப் பற்றி முனைவர் பட்டம் வாங்கும் அளவுக்கு அலசி ஆராய்ந்து விடுவார். அந்த அளவுக்கு ஆர்வக்கோளாறு அவரைப் பிடித்து ஆட்டிக்கொண்டிருந்தது. இவ்வாறு அல‌சி ஆராய‌ப்ப‌டும் விஷ‌ய‌ங்க‌ள் எல்லாமே அனேக‌மாக‌ அற்ப‌ விஷய‌ங்க‌ளாக‌வும், அவ‌ருக்கு தேவையில்லாத‌, ச‌ம்ப‌ந்த‌மில்லாத‌வையாக‌வுமே இருக்கும்.

 அவரைப் பார்க்க ஒரு நாள் வீட்டுக்கு போயிருந்தேன். அவருக்கு நான்காம் வகுப்பு படிக்கும் பையன். வகுப்பில் ஏதோ புராஜக்ட் செய்யச் சொன்னார்கள் என்று அட்டையில் வீடு செய்து தரும்படி இவரைக் கேட்க, இவர் தனது மனைவியைக் கேட்க, வீடு களேபரமாகி விட்டிருக்கிறது. ஹூம்.. சொந்தமா வீடு வாங்கத்தான் துப்பில்லை.. அட்டை வீடு கூட செய்ய முடியாதா உங்க அப்பாவாலே.. பேருதான் இஞ்சினீனீனீயர் என்று என்று சரமாரியாக மகனிடம் இடித்துரைத்தார் அம்மணி. ஓஹோ, யாரைப் பார்த்து என்ன கேள்வி என்று (கொஞ்சம் அதிகமாகவே) பொங்கி விட்டார் நண்பர். (கூட நான் இருக்கிற தைரியம் வேறு) எப்படியோ அவருக்கு அடி கிடி படாமல் சமரசம் பண்ணி விட்டு கிளம்பும் போது தரப்பட்ட காபி எனும் பானத்தையும் குடித்து விட்டு பிழைத்தால் போதுமென வந்து விட்டேன். அவரது பையன் மேல் கோபம் கோபமாக வந்தது. புராஜக்ட் பற்றி சொன்னதே சொன்னான், காபி கொடுத்த பிறகு சொல்லியிருக்கக் கூடாதா என்று.

 இது நடந்த பின் நான் என் வேலையில் கொஞ்ச நாள் மும்முரமாகி விட்டபடியால் அவ்வளவாக தொலைபேசியில் கூட நண்பருடன் பேசிக் கொள்ளவில்லை. ஒரு நாள் விபத்து போல அவர் வீட்டுக்குப் போய்த் தொலைத்து விட்டேன். வீட்டினுள் நுழைந்ததும் பெரும் அதிர்ச்சி. எங்கெங்கு காணினும் வீடுகள். அட்டை வீடு, மர வீடு, தெர்மகோல் வீடு, சீட்டுக்கட்டுகளை ஒட்டி அதில் வீடு, செய்தித்தாள்களை ஒட்டி அதில் வீடு, தீக்குச்சிகளில் வீடு, சிகரெட் டப்பா வீடு என வித விதமான வீடுகள் வீடெங்கும் வியாபித்திருந்தன. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன இது என்று கேட்டது தான் தாமதம், அவரது பையன் விளக்க ஆரம்பித்து விட்டான். இது அபார்ட்மென்ட் மாதிரி, இது ஸ்டுடியோ டைப் வீடு, இது வில்லா, இது பண்ணை வீடு, இது குடிசை அது இது என விளக்க ஆரம்பித்துவிட்டான்.  

 அவரது பையன் ஒன்றாம் வகுப்பில் சேரும் போது புதிய புத்தகம், நோட்டு வகையறாக்களுக்கு அட்டை போடப் பொறுமை இல்லாமல் நண்பர் எனக்கு தொலைபேசி எனது உதவியை நாடியது எனக்கு நியாபகம் வந்தது. அவருக்கா இவை அனைத்தையும் செய்யப் பொறுமை இருந்திருக்கிறது. போதாக்குறைக்கு ஏகப்பட்ட வேலைப் பளுவில் இருப்பவர் அவர். வீட்டிலும் அலுவலக வேலையைக் கவனிப்பவர் எப்படி இதையெல்லாம் செய்தார் என்று ஒரே ஆச்சரியம். என்னதான் ஆர்வக்கோளாறாயிருந்தாலும், இதுவரை இந்த அளவில் அவர் எதையும் செய்ததில்லை. இதுகுறித்து அவரிடமே கேட்க முற்பட்டேன். முந்திரிக் கொட்டை போல அவரது பையன் "அங்கிள், ஞாபகம் இருக்கா உங்களுக்கு, நீங்க போன தடவை வந்த போது தான் என் புராஜக்ட் பத்தி அப்பாகிட்டே சொல்லிகிட்டிருந்தேன், அப்போ அப்பாவுக்கு இதுல இன்ட்ரெஸ்ட் வந்தது தான்...., இன்னும் 6 டிசைன் வீடு புராஜக்ட் கைல வச்சிருக்கார், நெக்ஸ்ட் மந்த் அனேகமா முடிஞ்சிடும்" என்று விளக்க ஆரம்பித்து விட்டான். வைத்தானே வேட்டு, விளக்கியதே விளக்கினான் காபி வந்ததுக்கு அப்புறம் விளக்கி இருக்கலாமில்லையா. விதி யாரை விட்டது. அவனது பிரஸ்தாபம் காபி தயாரித்துக் கொண்டிருந்த நண்பரின் மனைவியின் காதுகளில் தெள்ளத் தெளிவாக விழுந்து எனது முந்தைய விஜயத்தை ஞாபகப்படுத்தி விட்டது என்பதை வந்த காபியின் சுவை (?) சொன்னது. நண்பரோ எதுவுமே அவரைப் பாதிக்காது என்பது போல சற்றும் முகச்சுழிப்பின்றி காபியை ரசித்து உறிஞ்ச ஆரம்பித்தார்.

 பற்றாக்குறைக்கு அவரது மகன் திரும்பவும் "அங்கிள், அப்பா கைல இன்னும் 6 புராஜக்ட் இருக்கு தெரியுமா, அனேகமா நெக்ஸ்ட் மன்த் முடிஞ்சிடும். இதுல பியூட்டி என்னன்னா எல்லா வீட்டிலேயும் டாப் சீலிங் போர்ஷனை தனியா ரிமூவ் பண்ணி உள்ளே இருக்கிற பிளானை டாப் ஆங்கிள்லே பார்க்கலாம். எல்லா வீட்டுக்கும் தனித்தனியா எஸ்டிமேஷன் போட்டு அப்பா ஆபீஸ் கம்ப்யூட்டர்லே வச்சிருக்கார் தெரியுமா?" என பீற்ற ஆரம்பித்தான்.

ஆர்வ மேலீட்டால் (கோளாறால்) அவனது குரலின் சுருதி ஏற ஏற, அடுக்களையில் பாத்திரம் கழுவும் போது ஏற்படும் சத்தமும் ஏற ஆரம்பிக்க நண்பர் மற்றும் எனது குலையும் நடுங்க ஆரம்பித்தது.

"போய் ஹோம் ஒர்க் பண்ணு" என அவனைத் துரத்தி வயிற்றில் பால் வார்த்த நண்பர் "காபி சாப்டுங்க" என வயிற்றில் புளியையும் கரைத்து ஊற்றினார். காபியைப் பார்த்து விட்டு ஒரு யோசனையுடன் ஜன்னலில் இருந்த ரோஜாப் பூந்தொட்டியின் பக்கம் என் பார்வை சென்றது. "பையன் ரொம்ப ஆசையா வளர்க்கறான், பட்டுப் போகும்" என என் யோசனையை முளையிலேயே கிள்ளி எறிந்தார் நண்பர். "உங்களை மாதிரி வர்றவங்க படற கஷ்டத்தை பார்த்துட்டு சகிக்காமல் தான் போன மாசம் காபி மேக்கர் வாங்கினேன், ஆனாலும் இதே கதைதான்" என்றார் மெதுவாக. அடேங்கப்பா, காபி மேக்கரில் கூட இவ்வளவு "அருமை"யான காபி தயாரிக்கலாம் என்பது அன்றுதான் எனக்குத் தெரிந்தது.

 "டாடி, என்னோட‌ அடுத்த‌ புராஜ‌க்ட் ப‌த்தி அங்கிள்கிட்டே ஏதோ கேட்க‌ணும்னு சொன்னீங்க‌ளே" என வீட்டுப்பாட‌ம் செய்து கொண்டிருந்த‌ பைய‌ன் திருவாய் ம‌ல‌ர்ந்த‌ருள‌வும், என் காலுக்கு கீழே பூமி ந‌ழுவ‌வும் ச‌ரியாக‌ இருந்த‌து.

******************