கடுகு.காம்
- Kadugu.Com
நையாண்டி விலாஸ்
வைகோ கைது.... 2
03-05-2008
வைகோ கைது - பகுதி 1
நேற்று கைது செய்யப்பட்ட வைகோ உடனடியாக வேலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தொலைபேசி ஒட்டுக்கேட்பு மற்றும் புலிகளுக்கு ஆதரவு விஷயத்தில் வைகோ கைது செய்யப்பட்ட விவகாரம் தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கிலியடித்த பல தமிழக அரசியல் தலைவர்கள் தமது புலி ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கி புலி எதிர்ப்பாளர்கள் ஆகிவிட்டனர்.
வைகோ கைது குறித்து அரசியல்வாதிகள் கருத்து……………
கலைஞர்…..
‘நெஞ்சணையில் இருந்தவராயினும், பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைக்க முற்பட்ட வஞ்சகரை பஞ்சணையில் இருத்தியா அழகு பார்க்க முடியும்?’ என்று கலைஞர் தமது உடன்பிறப்புக்கான கடிதத்தில் கேட்டுள்ளார்.
தமிழகத்தில் அனைத்து உணவு விடுதிகளிலும் புளி சாதத்திற்கு தடை விதிக்கப்படுவதாகவும் கருணாநிதி அறிவித்தார்.
மேற்கு மாம்பலத்தில் புளிக்காய்ச்சல் தயாரித்து விற்ற ஆறு பார்ப்பனர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
சரத்குமார்…..
வைகோ கைது நடவடிக்கை ஒரு கண்துடைப்பு என்று சரத்குமார் கருத்து தெரிவித்தார். புளி சாதத்தை தடை செய்த தமிழக அரசு புலிநகம் விற்பனைக்கு ஏன் தடை விதிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
விஜய டி.ராஜேந்தர் தனது வழக்கமான அடுக்கு மொழி வசனத்தில் வைகோ கைது பற்றி பேசி கிலி ஏற்படுத்தினார்.
இவரு ஆதரிச்சது புலி
மூக்குல வர்றது சளி
குழம்புல போடறது புளி
இன்னிக்கி கெழமை வெள்ளி
கலைஞர் வச்சாரு புள்ளி
போலீசு தூக்கிட்டாங்க அள்ளி
ஏ……டண்டணக்கா…..டணக்கணக்கா…….
தொல்.திருமாவளவன்….
வைகோ கைது நடவடிக்கை தேவையான ஒன்று என்று குறிப்பிடுகிறார் திருமாவளவன். கூட்டணி தர்மத்திற்காக தமது புலி ஆதரவு நிலையிலிருந்து சற்றே மாறி புலி எதிர்ப்பாளராக ஆகி விட்டதாகவும் கூறினார்.
வாட்டமாகக் காணப்பட்ட அவரிடம் சோர்வுக்குக் காரணம் கேட்டபோது, மதியம் உட்கொண்ட ‘புளிக்குழம்பு’ ஒத்துக் கொள்ளாமல் பேதி ஆகிவிட்டதாக கூறினார்.
விஜயகாந்த்…..
தமது தொலைபேசியும் ஒட்டுக்கேட்கப்படுவதால் தானும் எந்த நேரமும் வேலூர் செல்லலாம் என்று நம்புவதாக தெரிவித்தார். தாம் புலிகளை எப்போதும் ஆதரித்ததில்லை என்றும் இலங்கைத் தமிழர்களையே ஆதரித்ததாகவும் குறிப்பிட்டார்.
மருத்துவர் ராமதாசு……
இலங்கைத் தமிழர்களின் கண்ணீரைத் துடைக்க சரியான வழி போராட்டங்கள் நடத்துவதே என்றும் வைகோவின் புலி ஆதரவு பிரச்சாரம் பயன் தராது என்றும் மருத்துவர் ராமதாசு கூறுகிறார்.
தாம் ஒரு மருத்துவர் என்ற முறையில் உடலுக்கு தீங்கு செய்யும் புளியை உணவில் சேர்த்துக்கொள்ளக் கூடாது என்று தமிழக மக்களை அறிவுறுத்துவதாக கூறினார். புளியை தடை செய்யக்கோரி தமிழகமெங்கும் போராட்டம் நடத்தப் போவதாகவும் தமது தைலாவரம் தோட்டத்தில் புளியமரங்கள் அனைத்தும் வெட்டி வீசப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார்.
ஜெயலலிதா…..
தமது தத்து சகோதரரும் கூட்டணிக்கட்சித் தலைவருமான வைகோ கைது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்ட ஜெயலலிதா, திமுக அரசு புலிகளுக்கு ஆதரவு அளித்து வருவதாக குற்றம் சாட்டினார். கருணாநிதி ‘பாயும் புலி பண்டாரக வன்னியன்’ என்ற புத்தகத்தை எழுதி இருப்பதாகவும் அவரது புலி ஆதரவு நிலைக்கு இதுவே சான்று என்றும் கூறினார்.
தமிழ் நாட்டில் எந்த பெட்டிக்கடையிலும் ‘டைகர் பிஸ்கட்’ கிடைக்கும் நிலை உருவாகி விட்டதைச் சுட்டிக்காட்டிய ஜெயலலிதா, திமுக அரசை கலைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் (என்று நம்பப்படும்)
கிருஷ்ணசாமியின் கருத்து…..
தமிழகத்தில் புலிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது என்றும் வன்முறையைத் தூண்டும் வகையில் விற்கப்படும் ‘டைகர் பாம்’ தடை செய்யப்பட வேண்டிய ஒன்று என்றும் கிருஷ்ணசாமி தெரிவித்தார். இது போல ‘புலிக்குண்டு’ தமிழகத்தில் புழங்குவது கவலைக்குரியது என்றும் வருந்தினார்.
====++++====