நையாண்டி விலாஸ்

வைகோ கைது.... 3

05-05-2008

வைகோவின் சிறைவாசம்.

சிறை ‘வாசம்’ மிக மோசமாக இருப்பதாகவும், சகிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுவதாகவும் வைகோ தெரிவித்தார்.

தமது கூட்டணிச் சகோதரி, அருமைத் தங்கை ஜெயலலிதா தமக்கு ஒரு கட்டு ஊதுபத்தி அனுப்பி இருப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

சிறையில் பொழுது போக்கு

சென்ற முறை சிறைவாசம் போன்றே இம்முறையும் சிறையில் கூடைப்பந்து ஆடி விளையாடுவ‌தாக‌ வைகோ கூறினார். எனினும் கூடைப்ப‌ந்து கூடையான‌து அறுப‌த‌டி உய‌ர‌த்தில் வைக்க‌ப்ப‌ட்டிருப்பதாகவும், இது திமுக‌ அர‌சின் ப‌ழி வாங்கும் போக்கைக் காட்டுகிற‌து என்றும் க‌ண்ட‌ன‌ம் தெரிவித்தார்.

ம‌ருத்துவ‌ர் ராம‌தாசு க‌ண்ட‌ன‌ம்

கூடைப்பந்து த‌மிழ‌ர்க‌ளின் விளையாட்டு அல்ல‌, த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ குர‌ல் கொடுப்ப‌தாக‌க் கூறிக்கொள்ளும் வைகோ சிறையில் கூடைப்பந்து விளையாடுவ‌து ஏன் என்று ம‌ருத்துவ‌ர் ராம‌தாசு கேள்வி எழுப்பியுள்ளார். க‌ப‌டி, கில்லி, எறிப‌ந்து, கோலிக்குண்டு ஆகிய‌வையே த‌மிழ‌ர்க‌ளின் விளையாட்டுக்க‌ள் என்றும் அவ‌ற்றையே வைகோ விளையாட‌ வேண்டும் என்றும் வ‌ற்புறுத்தினார்.

விஜ‌ய‌காந்த் ஆறுத‌ல்

சிறையில் வாடி வ‌த‌ங்கும் வைகோவுக்கு விஜ‌ய‌காந்த் ஆறுத‌ல் செய்தி அனுப்பியுள்ளார். கூடைப்பந்து ஆட‌க்கூடாது என்று அவ‌ர் வைகோவை ம‌ன்றாடிக் கேட்டுக்கொண்டுள்ளார். கூடைப்பந்துக்கு மாற்றாக (வைகோவின் சின்னமான) ப‌ம்ப‌ர‌ம் ஆட‌லாம் என்று விஜ‌ய‌காந்த் யோசனை தெரிவித்துள்ளார். தானும் ஓர் சிறந்த பம்பரம் வீரர் என்று கூறிய அவர் தமது சின்னக்கவுண்டர் பம்பர அனுபவத்தை நினைவு கூர்ந்தார்.

தானும் கூடிய விரைவில் வேலூருக்கு செல்லும் நிலை ஏற்படலாம் என்றும் அப்போது வைகோவுடன் ‘இந்தியன் பம்பரம் லீக்’ மாட்ச் ஆட உத்தேசித்திருப்பதாகவும் விஜயகாந்த் தெரிவித்தார்.

ஜெயலலிதா…….

வைகோ வேலூர் சிறையில் இருப்பது பெரும் துக்கத்தை அளிக்கிறது என்று ஜெயலலிதா கூறினார். தன்னை ஊழல் வழக்கு எதிலேனும் கைது செய்தால் வேலூரிலேயே ‘போஸ்டிங்’ போடும்படி இறைவனை வேண்டுவதாகவும் அவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இல.கணேசன் (பாஜக)

புலிநகம் விற்று புலிகளுக்கு நிதியுதவி திரட்டும் நரிக்குறவர்கள் தமிழகத்தெருக்களில் துப்பாக்கிகளுட‌ன் பட்டப்பகலிலேயே வலம் வருவது சகஜமாகி விட்டது. இவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் வைகோ கைது நடவடிக்கையை தாம் வரவேற்பதாகவும் இல.கணேசன் கூறினார்.

 ====++++====