கட்டுரைகள்

ஆங்கிலப் (பொருளாதாரப்) புலிகள்
 
வர வர ஆங்கிலப் பத்திரிகைகளைப் பார்த்து சிண்டைப் பிய்த்துக் கொள்ளலாம் போல இருக்கிறது (என்னதான் நான் தமிழ் வழியில் கல்வி பயின்றிருந்தாலும், ஆங்கில அறிவில் சீனிவாச சாஸ்திரிக்கு அடுத்த இடம் நான் தான் என்பதை சொல்லிக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்). குறிப்பாகப் பொருளாதார நாளிதழ்களான, எகனாமிக் டைம்ஸ், பிஸினஸ் லைன், பிஸினஸ் ஸ்டாண்டர்டு, பினான்சியல் எக்ஸ்பிரஸ் போன்றவைகளில் நமக்குப் புரியக்கூடாது என்பதற்காகவே எழுதுகிறார்கள் என நினைக்கிறேன். எனக்கு ஒருவிதமாகப் புரியும் ஒரு விஷயம், வேறொருவருக்கு ஒரு மாதிரியாகப் புரிகிறது.

 இரட்டை அர்த்தம் அல்லது பல அர்த்தம் தொனிக்க இவர்கள் எழுதும் விஷயங்களைப் பார்த்தால், பாக்யராஜ், எஸ்.ஜே.சூர்யா எல்லாம் எம்மூலைக்கு என்று தோன்றுகிறது. போதாக்குறைக்கு நமக்குத் தெரிந்த லட்சம், கோடிகளைக் கூட ஒதுக்கித் தள்ளிவிட்டு இவர்கள் பேசுவது எல்லாம் மில்லியன், பில்லியன், டிரில்லியன், டாலர், யூரோ தான். ரூபாய்களில் எதையும் குறிப்பிடும் போக்கு கூட பெரும்பாலும் மாறிப்போய், எல்லாம் டாலர்களில் தான்.

 சமீபத்தில் சென்னையில் குப்பை அள்ள ஒப்பந்தத்தைக் கைப்பற்றிய நீல் மெட்டல் நிறுவன ஒப்பந்தம் அந்த நிறுவனத்தின் மோசமான சேவையால் ரத்து செய்யப்பட உள்ளது என்ற செய்தியை புள்ளிவிவரத்துடன் குறிப்பிட்டிருந்தனர். டாலர், யூரோ, டன், மெட்ரிக் டன், வெண்டைக்காய், விளக்கெண்ணைய் என..... கருமம். குப்பை அள்ளக்கூட நமக்கு வெளி நாட்டு உதவி வேண்டிக்கிடக்கிறது. எப்படியோ அதைக் கஷ்டப்பட்டு படித்துப் பார்த்ததில் ஒன்று மட்டும் விளங்கியது. டாலரோ மில்லியனோ, வீணாகப் போனது பல லட்சம் அல்லது கோடிகள், அதுவும் நமது வரிப்பணம்.. அவ்வளவுதான்.

 போதாக்குறைக்கு, நமது அரசாங்க நிறுவனங்களான மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தை, செபி கூட இதே ரீதியில் டாலர் கணக்கில் தான் பீற்றுகின்றன.

 இது தொடரும் பட்சத்தில், பெட்டிக்கடையில் பீடி வாங்கக்கூட டாலர் கணக்கில் தான் பேச வேண்டும் போல. கேட்டால் இந்தியா உலகமயமாகிறது, சர்வதேச சந்தை என்று நமது புலிகள் விஜயகாந்த் மாதிரி புள்ளி விவரங்களை அள்ளி வீசுவார்கள்.

 ====++++====