எதற்காக இருக்கலாம்?

சலங்கை பூஜை

நெருங்கிய உறவினர் ஒருவரின் இல்லத்திற்குச் சென்ற போது அங்கிருந்த ஒரு அழைப்பிதழ் கண்ணைக் கவர்ந்தது. உயரிய நேர்த்தியான தாளில் அச்சாகியிருந்தது. உறவினரிடம் விசாரித்ததில், அது பக்கத்து வீட்டுக்காரரின் மகளின் "சலங்கை பூஜை"க்கான அழைப்பிதழ் என்று தெரிய வந்தது.

அதென்ன சலங்கை பூஜை? பரதம் பயிலுபவர்கள் முறைப்படி நடனம் கற்றுக் கொள்ளும்போது காலில் சலங்கை கட்டிக் கொள்ள மாட்டார்கள். ஓரளவு கற்றபிறகு, கிட்டத்தட்ட அரங்கேற்றம் போல ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து, நடனம் ஆடத் தொடங்கும் முன்பாக பூஜை செய்து சலங்கை காலில் அணிவிக்கப்படும். (ஆனால் அரங்கேற்றம் என்பது தனியாக நடக்கும்). ஒரு காலில் ஆசிரியராலும், மற்றொரு காலில் பெற்றோராலும் சலங்கை அணிவிக்கப்படும்.

தி.நகர் மையத்தில் இருக்கும் ஒரு பிரபல அரங்கத்தில் சலங்கை பூஜை என்று அழைப்பிதழில் இருந்தது. ஒரு பிரபலம் வேறு நிகழ்ச்சிக்கு வருகிறார். இது போன்ற நிகழ்ச்சிக்கு குறைந்தது சில லட்சங்கள் வரை செலவாகும். சில சமயங்களில் நான்கைந்து பேருக்கு ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் மொத்தமாக சலங்கை பூஜை நடத்தி செலவைப் பிரித்துக் கொள்வார்களாம். செலவு குறையும். அழைப்பிதழ் கொடுத்தவர், நல்ல வசதி போலும், தனியாகவே செய்கிறார்கள்.

எதற்கு இப்படி ஒரு சலங்கை பூஜை சம்பிரதாயம் என்று உறவினரிடம் கேட்டேன். அவருக்கு  தெரியவில்லை. "ஏதோ சம்பிரதாயம், என் மகளுக்கும் இது மாதிரி கிராண்டா பண்ணணும். எனக்கும் ஒரே பொண்ணாச்சே, வேற யாருக்கு செய்யப் போறேன்?" என்றார்.

நாட்டிய‌ம் ஒரு தெய்வீகக் கலை. கடவுள் அருளால்தான் நாட்டியத்தில் சிறக்க முடியும். எனவே பூஜை செய்வது முறையானதே.

நாட்டியம் கற்றுக் கொள்ளும் போது சலங்கையைக் கட்டிக் கொண்டு ஆடினால் என்ன ஆகும்? ஒரு இரண்டு வருடம் கற்றுக் கொள்வதாக இருந்தால் என்ன ஆகும்? சலங்கையிலுள்ள மணிகள் எல்லாம் உதிர்ந்து விடும். குறைந்தது மூன்று மாதத்திற்கு ஒரு முறை சலங்கை மாற்ற வேண்டியதிருக்கும். இரண்டு வருடத்திற்கு கணக்கிட்டுப் பாருங்கள். இதையெல்லாம் விடுங்கள், நாட்டியம் கற்றுத்தரும் நட்டுவனார் வீட்டைச் சுற்றி இருப்பவர்கள் நிம்மதியாகத் தூங்க முடியுமா? நம் வீட்டுப் பிள்ளைகள் நாட்டிய வகுப்பு முடிந்து வீட்டுக்கு வந்து சும்மா இருப்பார்களா, ஆர்வக் கோளாறில் ஆடித் தாளித்து விட மாட்டார்களா? சலங்கை ஒலி, சலங்கை சத்தமாகி உயிரை வாங்காதா என்ன? இது போன்ற காரணங்கள் கூட சலங்கை அணிவிப்பதை தள்ளிப் போட்டிருக்கலாம்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

பெயர் சூட்டுவது, முதலில் சோறு ஊட்டுவது, அலங்கரித்து அழகு பார்ப்பது, புதுமனை புகுதல் போன்ற எல்லாமே காரணத்துடன் நாலு பேரை அழைத்துச் செய்யப்படும் நல்ல விஷயங்கள். நம் பழக்கங்கள் எல்லாமே நல்ல நோக்கத்துடனேயே உருவாக்கப்பட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் காரணங்கள் இருக்கின்றன. நமக்குத்தான் எதையும் அறிந்து கொள்ளப் பொறுமையும், மனமும், நேரமுமில்லை.

ஆனால் சம்பிரதாயங்களுக்கான காரணம் தெரியாமல் அவற்றில் ஆடம்பரத்தைப் புகுத்தி தமது டம்பத்தை மற்றவர்களுக்கு பறையறிவிக்க மட்டும் நம்மவர்களுக்கு நேர‌மிருக்கிற‌து.

 ====++++====