கடுகு.காம்
- Kadugu.Com
எதற்காக இருக்கலாம்?
கர்ப்பிணியின் கணவன் செய்யக் கூடாதவை
கர்ப்பிணியின் கணவன் செய்யக் கூடாதவை என்று பல செயல்கள் கூறப்படுகின்றன. தூரதேச பிரயாணம், மலையேற்றம், கடலில் குளித்தல், நகம் மற்றும் முடி வெட்டிக் கொள்ளுதல், சாவு ஊர்வலத்தில் கலந்து கொள்ளல், திதி வீட்டில் உண்ணல், வீட்டில் வேறு எவருக்கும் திருமணம் செய்தல் ஆகியவை சில.
இவற்றில், தூரதேச பிரயாணம், மலையேற்றம், கடலில் குளித்தல் ஆகியவை ஆபத்தானவை. இச்செயல்களை மேற்கொள்வதாகச் சொல்லிச் சென்றவன் வீட்டிற்குத் திரும்பி வந்தால்தான் உண்டு. திரும்ப வராவிடில் அவனது மனைவியின் கதி என்ன ஆகும்?
சாவு ஊர்வலத்தில் செல்லுதல், திதி வீட்டில் உண்ணல் ஆகியவை உடல் நலத்திற்கு ஒவ்வாதவையாகவும் தீட்டாகவும் கருதப்படுகின்றன.
மனைவியின் கர்ப்பம் தெரிய வந்ததிலிருந்து பிரசவம் ஆகும் வரையில் சவரம் செய்யாமல் இருப்பது ஒரு பழக்கம். இப்போதெல்லாம் எவரும் இப்படி இருப்பதில்லை. ஆயினும் சிலர் இன்னும் இவ்வழக்கத்தைப் பின்பற்றி வருகின்றனர். ஏழெட்டு மாதங்களாக முடி திருத்தாமல், சவரம் செய்யாமல், நகம் வெட்டாமல் இருக்கும் ஒருவனை எண்ணிப் பாருங்கள். கிட்டத்தட்ட காட்டுவாசி போல இருப்பான். அவன் ஊரை விட்டு எங்கேயும் போவானா என்ன? அங்கேயே கிடக்க வேண்டியது தான். மனைவியின் அருகிலேயே கணவனை இருக்க வைக்க இது ஒரு உபாயமாக இருந்திருக்க வேண்டும். மனைவி வேற்றூரிலிருக்கும் பிறந்த வீட்டுக்கு போயிருந்தாலும் கூட இவன் கிடப்பிலேயே கிடக்க வேண்டியதுதான். சில மன்மதராசாக்கள் ‘கண்ட’ இடங்களுக்குப் போய் வராதிருக்கவும் இந்த பரதேசிக் கோலம் கண்டிப்பாக ஒரு தடையாகவே இருந்திருக்க வேண்டும்.
திருமணம் செய்தல், வீடு கட்டுதல் ஆகியவை மிகப்பெரிய வேலைகள். திருமண விஷயமாக வரும் விருந்தினரைக் கவனிக்க வேண்டும். வீட்டு வேலைகள் அதிகமாக இருக்கும். கர்ப்பிணியைக் கவனிக்க ஆள், நேரம் இருக்காது. வருவோர் போவோரின் கண் படும். வீடு கட்டுதல் என்றாலே பண முடை வரும் அதனால் வீட்டிலும் தகராறு மனஸ்தாபங்கள் வரும் இது போல் பல காரணங்கள் இருக்கலாம்.
====++++====